அலோர் ஸ்டார், நவம்பர்.11-
பினாங்கு தீவு, கெடா மாநிலத்திற்கே சொந்தம் என்று உரிமை கோரி வரும் மந்திரி பெசார் சனூசி முகமட் நோர், பினாங்கு தீவு குத்தகைக்கு விடப்பட்டதில் கெடா மாநிலத்திற்கு, புத்ராஜெயா உரிமத் தொகை வழங்க வேண்டும் என்று சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
கெடா மந்திரி பெசார் சனூசியின் இந்த நடவடிக்கையை பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய் இன்று கடுமையாகச் சாடியுள்ளார்.
கெடா மாநிலத்தை நிர்வகித்து வரும் மந்திரி பெசார் சனூசி, மாநிலத்தின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டுமே தவிர 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விவகாரத்தை இன்று கேள்வி எழுப்புவதும், உரிமத் தொகை கோரி சட்ட நடவடிக்கை எடுப்பதும் வருத்தம் அளிக்கிறது என்று வோங் ஹோன் வாய் குறிப்பிட்டுள்ளார்.
விளைச்சலுக்கு உதவாத பயிரைக் கெடா மந்திரி பெசார் கையில் எடுத்துள்ளார் என்று வோங் ஹோன் வாய் வர்ணித்துள்ளார்.
பினாங்கு மாநிலம் விவகாரம் தொடர்பில் புத்ராஜெயாவிற்கு எதிராக கெடா மாநில அரசு, மேற்கொள்ளவிருக்கும் சட்ட நடவடிக்கையில் வழக்கறிஞர் குழுவைத் தேர்வு செய்யும் பணி தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக சனூசி நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து வோங் ஹோன் வாய் இன்று எதிர்வினையாற்றியுள்ளார்.
புத்ராஜெயாவிடமிருந்து சனூசி, ஆண்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக கோரியுள்ளார். இந்த இழப்பீடு விகித ஒப்பந்தம், கடந்த 1786 ஆம் ஆண்டிலிருந்து திருத்தப்படவில்லை என்று அவர் குறிப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் விரிவான ஆய்வை மேற்கொள்ள நாட்டின் முன்னணி வரலாற்று ஆசிரியர்களையும் சட்டக்குழுவில் தாங்கள் இடம் பெறச் செய்யப் போவதாக சனூசி குறிப்பிட்டு இருந்தார்.








