அரசுத் தரப்பு, குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதால், 3,947.4 கிராம் கஞ்சா கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 48 வயது லாரி உதவியாளரை ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாப்பா அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தியதாக எஸ். மதியழகன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி டத்தோ நோர்ஷாரிடா அவாங், போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளின் சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதையும், காரில் மற்றவர்களின் டிஎன்ஏ மற்றும் கைரேகைகள் கண்டறியப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.
இதனால், போதைப்பொருள் மதியழகனின் கட்டுப்பாட்டில் இருந்ததை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதாகக் கூறி, அவரைத் தற்காப்பு வாதம் முன்வைக்க அழைக்காமலேயே அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை அவர் எதிர்நோக்கியிருக்க வேண்டியிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர்கள் சரண் சிங் கார்த்தார் சிங் மற்றும் நூர்ஃபரிஹா அர்ஷாட் ஆகியோர் ஆஜராகினர்.








