மலேசியாவை 2030-ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு நாடாக உருவாக்கும் இலக்கை முன்னெடுக்கும் வகையில், இலக்கவியல் அமைச்சு தனது தலைமைத்துவக் குழுவைப் பலப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அமைச்சு மற்றும் முக்கிய நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலக்கவியல் மேம்பாடு தொடர்பில் இலக்கவியல் அமைச்சின் துணை தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு டத்தோ டாக்டர் அப்துல் காபார் அபு பாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகமான எம்டிஇசி (MDEC) நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக அட்ரியன் மார்செல்லுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏஐ மலேசியா நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக அர்ஸுமி முஹமட் யுசோஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தேசிய இலக்கவியல் துறையின் தலைமை இயக்குநராக நூர்ஜான் முஹமட் முஸ்தஃபா, மைடிஜிட்டல் கார்பரேஷன் நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக எல்லினா ரோஸ்லான், இலக்கவியல் அமைச்சின் நிறுவனத் தொடர்புப் பிரிவுத் தலைவராக நூர் அனீதா அப்துல்லா பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் மூலம் இலக்கவியல் உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், முதலீடு மற்றும் திறன் மேம்பாட்டை விரைவுபடுத்த முடியும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.








