ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.03-
நாடாளுமன்ற மக்களவை, ஊராட்சி மன்றச் சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே ஊராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் கொண்டு வர முடியும் என்று பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதில் உள்ள தடைகளைத் தாண்டி வர, மாநிலச் சட்டத்தை இயற்றியது மற்றும் நீதிமன்றத்திற்குச் சென்றது எனப் பினாங்கு அரசு ஏற்கனவே பல முயற்சிகளை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
இருப்பினும், இதற்கான இறுதித் தடையைக் கூட்டரசு மட்டத்திலேயே சரிசெய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
பினாங்கைக் தவிர வேறெந்த மாநிலமும், தாங்கள், தங்களால் இயன்றதைச் செய்ததாகச் சொல்ல முடியாது. ஆனால் பினாங்கு மாநிலம் அதைச் செய்திருக்கிறது என்று சொல்லலாம். இதற்கான இறுதித் தடை ஊராட்சி மன்றச் சட்டத்தைத் திருத்துவதுதான், என்று கோம்தாரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
ஊராட்சி மன்றத் தேர்தலுக்கான பினாங்கு அரசின் போராட்டம் 2012-இல் தொடங்கியது. அப்போது மாநிலச் சட்டமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், ஊராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான அனைத்து முந்தைய விதிகளையும் ரத்து செய்யும் ஊராட்சி மன்ற சட்டத்தின் பிரிவு 15 அமலில் இருக்கும் வரை, மாநில அரசின் சட்டம் செல்லாது என்று புத்ராஜெயா கூறியது.
இதனைத் தொடர்ந்து பினாங்கு அரசு நீதிமன்றத்தை நாடியது. ஆனால், ஆகஸ்ட் 2014-இல் தீர்ப்பளித்த கூட்டரசு நீதிமன்றம், ஊராட்சி மன்றத் தேர்தலைச் சுயமாக நடத்தும் அதிகாரம் பினாங்கு மாநில அரசுக்கு இல்லை என்று தீர்ப்பளித்தது. தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, ஒரு மேயர் அல்லது டத்தோ பண்டார் மற்றும் 8 முதல் 25 வரையிலான கவுன்சிலர்களைப் பினாங்கு மாநில அரசே நியமிக்கிறது என்று சாவ் கோன் இயாவ் தெளிவுப்படுத்தினார்.
அண்மையில் கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்த சாத்தியக்கூறு ஆய்வு ஒன்றை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இதற்கு அம்னோ மற்றும் பாஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








