Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரசு பொது பல்கலைக்கழகங்களில் தகுதி அடிப்படையிலேயே மாணவர் சேர்ப்பு: உத்தரவாதம் அளித்தது உயர்க்கல்வி அமைச்சு
தற்போதைய செய்திகள்

அரசு பொது பல்கலைக்கழகங்களில் தகுதி அடிப்படையிலேயே மாணவர் சேர்ப்பு: உத்தரவாதம் அளித்தது உயர்க்கல்வி அமைச்சு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

அரசாங்கப் பொது பல்கலைக்கழகங்களின் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை, முழுக்க முழுக்க தகுதி அடிப்படையிலான கொள்கையைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகிறது என்று உயர்க்கல்வி அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

அதே வேளையில் UPUOnline முறையில் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறையில் முறைகேட்டிற்கு வழிவகுக்கக்கூடிய கசிவுகள் இருப்பதாகக் கூறப்படுதை உயர்க்கல்வி அமைச்சு முற்றாக மறுத்துள்ளது.

2025/2026 ஆம் ஆண்டுக்கான பொது பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்ப்புக்கு UPUOnline முறையின் கீழ் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 866 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 78 ஆயிரத்து 883 பேர் அல்லது 71.8 விழுக்காட்டினருக்கு இளங்கலைப் பட்டப்படிப்பிற்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி தலைமை இயக்குநர் பேராசிரியர் அஸ்லிண்டா அஸ்மான் கூறினார்.

பல்லைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையானது, அனைத்து தகுதியுள்ள மனுதாரர்களையும் உள்ளடக்கியதாகும். மிக உயர்ந்த தகுதி முதல் குறைந்த தகுதி வரை வரிசைப்படுத்தி, மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் விளக்கம் அளித்தார்.

4.00 என்ற ஒட்டுமொத்த தரப் புள்ளி சராசரியான CGPA – ஐ பெற்று பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து STPM அல்லது அதற்கு நிகரான மாணவர்களுக்கு பட்டப்படிப்பிற்கான இடங்கள் கட்டாயம் வழங்கப்படும் என்று உயர்க்கல்வி அமைச்சு உறுதி அளித்து இருப்பதாக பேராசிரியர் அஸ்லிண்டா கூறினார்.

Related News