நாட்டில் வாட்டி வதைக்கும் கோடை வெயில் ஒருபுறம் மக்களைப் பாடாய்ப்படுத்தினாலும், மறுபுறம் ஆச்சரியமான சில சம்பவங்களையும் அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில், கெடா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், எவ்வித அடுப்பு உதவியுமின்றி வெறும் சூரிய வெப்பத்திலேயே முட்டை சமைத்துக் காட்டிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
பாடாங் தெராப் பகுதியில் தற்போது ‘நிலை 2’ வெப்ப அலை வீசி வருகிறது. சுமார் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், அந்தப் பெண் ஒரு காலி வாணலியை அப்படியே மொட்டை மாடியில் வைத்துள்ளார். சரியாக ஒரு மணி நேரம் வெயிலில் காய்ந்த அந்த வாணலியில், அவர் ஒரு முட்டையை உடைத்து ஊற்றியபோது, சில நிமிடங்களிலேயே அது தானாகவே வெந்து 'ஹாஃப் பாயில்' நிலைக்கு வந்தது.
இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதளவாசிகள் , "இனி கேஸ் செலவு மிச்சம் போல!" என கிண்டலாகக் கூறினாலும், நிலவும் அதீத வெப்பம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். இந்த உஷ்ணமும் தண்ணீர் பற்றாக்குறையும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.








