மென்மையான பேச்சும், உறுதியான மனமும், சுற்றியுள்ள அனைவரையும் அரவணைக்கும் தாயன்பும் கொண்டவராக துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவை தாமும் தமது மனைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவும் நினைவுகூர்வதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அன்புடன் “காக் ஹஸ்மா” என்று அழைக்கப்பட்ட சித்தி ஹஸ்மா, மக்கள் மனதுக்கு நெருக்கமான தாயுள்ளம் கொண்டவராக விளங்கியதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மறைவு குறித்து தமது சமூக ஊடகப் பதிவில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அன்வார், நாட்டின் அன்பைப் பெற்ற ஒரு தாயை மலேசியா இழந்து விட்டதாகவும், அவரது நற்குணங்களும் நாட்டுக்காக ஆற்றிய சேவையும் என்றும் நினைவுகூரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சித்தி ஹஸ்மாவின் மறைவு தமக்கும் தமது மனைவிக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அன்வார், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
100 வயதில் இன்று காலை 9.20 மணிக்கு தேசிய இருதயக் கழகமான ஐஜேஎன்னில் காலமான சித்தி ஹஸ்மாவுக்கு, அரசாங்கம் “Istiadat Pengebumian Pembesar Negara” எனப்படும் அரசு உயர் பிரமுகருக்கான நல்லடக்க மரியாதையை வழங்க முடிவு செய்தது.
அதன்படி, அவரது உடல் இன்று பிற்பகல் மஸ்ஜிட் அஸ்-ஷாரிஃப், தாமான் சுங்கை பீசி இண்டா, ஶ்ரீ கெம்பாங்கானுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். அஸர் தொழுகைக்குப் பின்னர் இறுதித் தொழுகை நடைபெற்றதைத் தொடர்ந்து, அவரது உடல் புத்ராஜெயா, பிரிசின்ட் 20-இல் உள்ள புசாரா நெகாராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சித்தி ஹஸ்மாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது நீண்டகால சேவையையும் மக்கள் மீதான அக்கறையையும் நினைவுகூர்ந்த அன்வார், அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.








