கோலாலம்பூர், டிசம்பர்.22-
வீட்டுக் காவல் கோரி, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் தாக்கல் செய்த வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்து இருக்கும் உயர் நீதிமன்றத்தின் முடிவு, மன்னிப்பு வழங்கும் விவகாரங்களில் மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் தனித்துவமான அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதாக உள்ளது என்று நஜீப்பின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முஹமட் ஷாஃபி அப்துல்லா விமர்சித்துள்ளார்.
மன்னிப்பு தொடர்பான ஒவ்வொரு முடிவும் மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையுடன்தான் எடுக்கப்பட வேண்டும் என்று இந்தத் தீர்ப்பு உணர்த்துவதாகவும், இது மாமன்னரின் தனிப்பட்ட அதிகாரத்தைப் பறிப்பதாக அமையும் என்றும் ஷாஃபி வாதிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஷாஃபி அறிவித்துள்ளார்.
மாமன்னர் வழங்கிய மன்னிப்பு அரசாணையில் நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் "கூடுதல் உத்தரவு" இருப்பதாக ஷாஃபி வாதிட்டுள்ளார். ஆனால், அத்தகைய உத்தரவு மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை அல்லது முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதால் அது செல்லாது என கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி எலிஸ் லோக் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி எலிஸ் லோக் வழங்கிய தீர்ப்பு தங்களுக்கு வியப்பளிப்பதாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் ஷாஃபி தெரிவித்தார். பல முக்கியமான சட்ட அம்சங்களை நீதிபதி சரியாக ஆய்வு செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
வீட்டுக் காவல் என்பது மலேசியாவிற்குப் புதிய ஒன்றல்ல என்று வாதிட்ட ஷாஃபி, இதற்கு முன்பு ஒரு கொலைக் குற்றவாளியான, நாட்டின் முதலாவது நிதி அமைச்சர் துன் எச்.எஸ்.லீயின் பேரன் Kenneth Lee Fook Mun, - னுக்கு தற்போதைய சட்டங்கள் மற்றும் சிறைத்துறை விதிகளின் கீழ் வீட்டுக் காவல் வழங்கப்பட்டதைச் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரம் நஜீப்பின் தனிமனித சுதந்திரம் சார்ந்தது என்று குறிப்பிட்ட ஷாஃபி , சாதகமான தீர்ப்பு வந்திருந்தால் நஜீப்பை உடனடியாக வீட்டுக் காவலில் வைத்திருக்க வேண்டும். அரசாங்கம் மேல்முறையீடு செய்தாலும் அவரது விடுதலையை நிறுத்தி வைக்க முடியாது என்று வாதிட்டிருந்தார்.
மாமன்னர் வழங்கியதாகக் கூறப்படும் அந்த "கூடுதல் உத்தரவு" உண்மையானது என்றும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி மிகவும் அதிகாரப்பூர்வமானது என்றும் ஷாஃபி மீண்டும் வலியுறுத்தினார்.








