2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு அரசாங்கம் நேரடி ரொக்க உதவி வழங்க வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புவதாக பிகேஆர் இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் நூர் அமேலியா ஸைனாபிலா ஸைஃபிரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இரு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் இளைஞர்களிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் இதனைத் தெரிவித்த அவர், புத்தகப் பற்றுச்சீட்டு அல்லது அட்டைகளைக் காட்டிலும் நேரடி பண உதவியையே இளைஞர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
வீடு வாங்குவதிலும் இளைஞர்களுக்கு நிதிச் சுமை அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், முதல் வீட்டின் விலை 5 லட்சம் ரிங்கிட்டுக்கு உட்பட்டால் முழு முத்திரைத் தீர்வை விலக்கு போன்ற அரசாங்க உதவிகள் வழங்கப்பட்டாலும், அவை நேரடி உதவியாக கருதப்படுவதில்லை என்றார்.
இதனிடையே, இளைஞர்களுக்கான நிதியுதவி அவசியம் என்றாலும், எவ்வளவு காலத்துக்கு அரசாங்க உதவியைச் சார்ந்திருக்க முடியும் என்பதையும் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று அம்னோ மகளிர் இளைஞர் பிரிவு உறுப்பினர் ஷாமெல்யா நோராஸிஸி கூறியுள்ளார்.








