கோலாலம்பூர், டிசம்பர்.28-
மலேசியாவில் 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக ஊடகத் தளங்கள், வரும் ஜனவரி 1 முதல் நாட்டின் சட்டங்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட வேண்டும் எனத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இயங்கலை மோசடிகள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், AI Deepfake போன்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், இதற்குப் பொறுப்பேற்க மறுக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
"சில நிறுவனங்கள் ஒத்துழைக்கின்றன, பல நிறுவனங்கள் புகார்களைக் காதில் வாங்குவதே இல்லை" எனக் குறை கூறிய அமைச்சர், மக்களின் பாதுகாப்பிற்காக இனி எந்தச் சமரசமும் செய்யப் போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தனிப்பட்ட உரிமம் பெறத் தேவையில்லை என்றாலும், மலேசியாவின் தகவல் தொடர்பு , பல்லூடகச் சட்டத்தின் கீழ் அனைத்துத் தளங்களும் பொறுப்பாக்கப்படும் இந்த அதிரடி மாற்றம், டிஜிட்டல் உலகில் ஒரு புதிய பாதுகாப்புப் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.








