மலாக்கா, அக்டோபர்.31-
மலாக்கா, பூலாவ் மலாக்காவில் 800 முதல் 900 ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய மரக் கப்பலின் உடலமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இது நாட்டின் தொல்பொருள் உலகில் வரலாற்றை உருவாக்கியுள்ளது. இது மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான கப்பல்களில் மிக பழமை வாய்ந்ததாகும். இது மலாக்கா மலாய் சுல்தான்களில் ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்த பழங்காலக் கப்பலின் கண்டுபிடிப்பு இந்தப் பிராந்தியத்தில் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது என்று தேசிய பாரம்பரியத்துறையின் துணை ஆணையர் ருஸைரி அர்பி தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் கி.பி 1200 முதல் 1300 வரையிலான காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. இதன் அமைப்பு மற்றும் உடலமைப்பு அளவு மலாக்கா பேரரசின் மகத்துவத்தின் அடையாளமாக விளங்கும் புகழ்பெற்ற Mendam Berahi கப்பலுக்கு கிட்டத்தட்ட ஒத்திருக்கிறது.
காலனித்துவ ஆட்சிகள் இருந்ததற்கு முன்பே இந்த கப்பல் கட்டப்பட்டு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.








