பாலிங், செப்டம்பர்.05-
மலேசியாவில் 90 நாட்களுக்கு மேற்போகாத நிலையில் கூடுதல் காலம் தங்கிவிட்ட அந்நிய நாட்டவர்களுக்கு உடனடி அபராத விதிப்பு முறையை மலேசிய குடிநுழைவுத்துறை அமல்படுத்தியிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதல் காலத்திற்குத் தங்கியிருந்த அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களுக்கும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது, நோய்வாய்ப்பட்டிருந்தது, விபத்து அல்லது பேரிடர் போன்ற நியாயமான காரணங்கள் அடிப்படையில் 90 நாட்களுக்கு மேற்போகாத நிலையில் கூடுதல் காலத்திற்கு தங்கியவர்களுக்கு கொம்பவுன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
நாள் ஒன்றுக்கு 30 ரிங்கிட் அபராதம் என்ற விகிதத்தில் 30 நாட்களுக்கு தொள்ளாயிரம் ( 900 ) ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். 31 நாள் முதல் 60 நாட்களுக்கு ஆயிரம் ரிங்கிட்டும், 61 நாள் முதல் 90 நாட்கள் வரை 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று சைஃபுடின் விளக்கினார்.








