தனக்குச் சொந்தமில்லாத 347,800 ரிங்கிட் பணத்தை வங்கிக் கணக்குகளில் வைத்திருந்த 56 வயது தனித்து வாழும் தாய்க்கு ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் 11 மாதச் சிறைத்தண்டனை விதித்தது.
ரோஸ்னானி ஷைக் மாஹ்மூட் என்ற அந்தப் பெண், 61 வயது லிம் சிவீ ஹூன் என்பவருக்குச் சொந்தமான பணத்தைத் தனது இரண்டு வங்கிக் கணக்குகளில் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான “கென்னி வாங்” என்ற கொரிய ஆடவர், லிம்முக்கு 100,000 அமெரிக்க டாலர்கள், ஐபேட், கைப்பை, மோதிரம் ஆகியவற்றை அனுப்பியதாகக் கூறினார். பின்னர், பொட்டலத்தை விடுவிக்கப் பணம் செலுத்த வேண்டும் என மற்றொருவர் கூறியதை நம்பி லிம், 347,800 ரிங்கிட்டை ரோஸ்னானியின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்.
ஆனால், பொட்டலம் கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார். பணம் திரும்பக் கிடைக்காததால் அரசுத் தரப்பு அதிகபட்ச தண்டனை கோரியது. இதையடுத்து, நீதிபதி அவாங் கெரிஸ்நாடா அவாங் மாஹ்மூட், ரோஸ்னானிக்கு 11 மாதச் சிறைத்தண்டனை விதித்தார்.








