கோலாலம்பூர், ஜனவரி.22-
ஆறு வயது சிறுவர்களை பள்ளிகளில் முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே அனுமதிப்பது என்பது கல்விப் போட்டியை உருவாக்குவதற்கோ அல்லது அவர்களை ‘பரிசோதனை எலிகளாக’ மாற்றுவதற்கோ அல்ல என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் நலன், நல்வாழ்வு மற்றும் அவர்களின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தம்மைப் பொறுத்தவரை, இந்த அமலாக்கத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகளின் உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் கற்றல் திறன் உள்ளிட்ட விரிவான மதிப்பீட்டின் மூலம் அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்வதாகும் என்றார் அவர்.
"இது ஒரு போட்டியல்ல; மாணவர்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப அடிப்படைகளை வலியுறுத்துவதே எங்களின் நோக்கம், கல்வி கற்றலை விரைவுபடுத்துவது அல்ல." நமது குழந்தைகள் சோதனைக்காகவோ அல்லது பரிசோதனை எலிகளாகவோ பயன்படுத்தப்பட மாட்டார்கள். அதனால்தான் இந்த விவகாரத்தில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். இது 13-வது மலேசியத் திட்டத்தில் நாங்கள் விவாதித்த ஒரு கொள்கையாகும்," என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் ஃபாட்லீனா சீடேக் இதனைத் தெரிவித்தார்.








