புத்ராஜெயா, ஜூலை.21-
சக நாட்டவரைக் கொலை செய்ததாகக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட இந்தியப் பிரஜை ஒருவருக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் ஓர் இந்தியப் பிரஜையான சுகன் கணேசன் என்பவரைக் கொலை செய்தக் குற்றத்திற்காக 33 வயது கே. அழகேசனுக்கு மரணத் தண்டனைக்கு பதிலாக 35 ஆண்டு சிறைத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் விதித்தது.
ஓர் இந்தியப் பிரஜையான அழகேசனுக்கு விதிக்கப்பட்ட 12 பிரம்படித் தண்டனையையும் அப்பீல் நீதிமன்றம் குறைத்துள்ளது.
இதற்கு முன்பு, உயர் நீதிமன்ற நீதிபதி நோர்ஷாரிடா அவாங், குற்றவாளி அழகேசனுக்கு 15 பிரம்படித் தண்டனையை விதித்து இருந்தார்.
சம்பந்தப்பட்ட இந்தியப் பிரஜையின் உடலில் ஆழமான 15 வெட்டுக் காயங்கள் இருந்ததை நீதிமன்றம் கடுமையாகக் கருதிய போதிலும் மரணத் தண்டனைக்கு பதிலாக சிறைத் தண்டனை விதிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஸைனி மஸ்லான் தெரிவித்தார்.








