பேராக், பிடோர் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நேற்று மாலை 6.08 மணியளவில் 41 வயது ஆடவர் மீது இருவர் துப்பாக்கியால் சுட்டதில், அவரது இடது தோளில் குண்டு பாய்ந்தது.
பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் அபிடின் கூறுகையில், பெட்ரோல் நிரப்புவதற்காக வெள்ளை நிற டொயோட்டா லேண்ட் குரூசரில் சென்றிருந்தபோது, கறுப்பு நிற ஹோண்டா சிட்டி ஒன்று அவரது வாகனத்தின் முன்பாக வந்து நின்றதாகத் தெரிவித்தார்.
அந்த காரில் இருந்து இறங்கிய இருவர், வாகனத்தை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். வாகனத்தில் இருந்த மேலும் நான்கு பேருக்கு காயம் ஏற்படவில்லை.
காயமடைந்தவர் முதலில் தாப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் 9 மில்லிமீட்டர் லூகர் ரக குண்டு ஒன்று, நான்கு தோட்டாக் கூடுகள் மற்றும் குண்டுத் துகள்கள் கண்டெடுக்கப்பட்டன. சந்தேக நபர்களையும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணத்தையும் கண்டறிய பல இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.








