சிரம்பான், டிசம்பர்.11-
நேற்று காலையில் சிரம்பான், போர்ட்டிக்சன் டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் போலீசார் இருவரைக் கைது செய்துள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த 12 மணி நேரத்திற்குள் அந்த இரு சந்தேகப் பேர்வழிகளும் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிரம்பான் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஒரு வீட்டைச் சோதனையிட்ட போது 40 வயது மதிக்கத்தக்க இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம் ஒரு கைத்துப்பாக்கியையும் சந்தேக நபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காரில் பயணம் செய்த இரு நபர்கள் காயமுற்றனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மிக கவலைக்கிடமான நிலையில் சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக அஸாஹார் அப்துல் ரஹிம் குறிப்பிட்டார்.








