கோலாலம்பூர், ஜூலை.19-
மலேசியாவில் அரசியலும், தொழில்நுட்பமும் ஒன்றிணையும் புதிய அத்தியாயமாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தன்னைப் போன்றே தோற்றமும் குரலும் கொண்ட PMX AI என்ற செயற்கை நுண்ணறிவு அவதாரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இனி பொதுமக்கள், WhatsApp மூலமாக, இந்த AI அவதாருடன் நேரடியாக உரையாடி, தங்களின் கருத்துகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் கேள்விகளை பகிர்ந்து கொள்ளலாம்.
நேற்று இது குறித்த அறிவிப்பை தமது சமூக ஊடகத்தில் வெளியிட்ட அன்வார், "நாட்டிற்கும் மக்களுக்கும் பயனுள்ள புதிய சிந்தனைகளையும், அர்த்தமுள்ள பொதுக் கலந்துரையாடல்களையும் உருவாக்கும் புதிய முயற்சி" என்று வர்ணித்துள்ளார்.
மேலும், ஒரு தலைவரால் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்றாலும், AI மூலம் மக்களின் குரலைக் கேட்டு, அவர்களின் எதிர்பார்ப்புகளை இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், PMX AI அறிமுக காணொளியும் சமூக வலைதளங்களில் நேற்று முதல் கவனம் ஈர்த்து வருகின்றது.
அதில் விண்வெளி வீரர், சூப்பர் ஹீரோ, இளம் வயது அன்வார் உள்ளிட்ட பல்வேறு தோற்றங்களில் AI அவதார் தோன்றுகிறது.
"நான் அன்வாரின் டிஜிட்டல் நீட்சி... மக்களின் குறைகளைக் கேட்கவும், உதவவும், சேவை செய்யவும் எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்ற வசனமும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
பிரதமரின் உரைகள், எழுத்துகள் மற்றும் மதானி அரசின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள PMX AI, மக்களின் மனநிலையை அறிந்து, அரசு சேவைகள் தொடர்பான தகவல்களை எளிதாக வழங்கும் புதிய தகவல் தொடர்பு தளமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் செயற்கை நுண்ணறிவை நேரடியாக மக்கள் சேவையில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் மலேசியா மேலும் ஒரு முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.








