கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
புத்ராஜெயா மற்றும் சைபர் ஜெயாவில் பணியாற்றும் அரசாங்க இந்திய ஊழியர்களுக்கான சமூக நல அமைப்பான இமயத்தின் பொறுப்பாளர்கள், மரியாதை நிமித்தமாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அலுவலுகத்திற்கு நேற்று புதன்கிழமை வருகை புரிந்தனர்.

கோலாலம்பூர், எம்ஓஎஃப் இன்க். டவரில் உள்ள இலக்கவியல் அமைச்சரின் அலுவலகத்திற்கு இமயத்தின் பொறுப்பாளர்கள் மேற்கொண்ட இந்த மரியாதை நிமித்த வருகையின் போது அமைச்சர் கோபிந்த் சிங்கின் அரசியல் செயலாளரும், சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான மிஷேல் ங் தலைமையில் அமைச்சரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சேக்கு ஆனந்த் முன்னிலையில் கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.
இமயத்தின் தொலைநோக்கு, இலக்கு மற்றும் திட்டங்கள் குறித்து இலக்கவியல் அமைச்சின் பொறுப்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கல்வி மற்றும் தொழில்துறை மூலம் சமூக மேம்பாடு, முற்போக்கான சிந்தனையை உருவாக்க இந்திய சமூகத்திற்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பல்வேறு மத, கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட சமூகங்களை உள்ளடக்கிய திட்டங்களை முறைப்படுத்துவதன் முக்கியத்துவம் ஆகியவை இந்த கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் அடங்கும்.
எதிர்காலத்தில் இமயம் திட்டத்தை செயல்படுத்துவதில் இலக்கவியல் அமைச்சுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தவிர எஸ்டிபிஎம் அளவில் குறிப்பாக மாணவர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்தை போதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் குமரனின் முயற்சிக்கு இமயம் ஆதரவு வழங்கும் என்று அமைச்சரின் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்தது.

இறுதியாக தீபாவளி காலா நைட் 2025 கலை விழாவில் கலந்து கொள்வதற்கு அமைச்சர் கோபிந்த் சிங்கிற்கு இமயம் பொறுப்பாளர்கள் வாய்மொழி அழைப்பை விடுத்தனர்.








