கிள்ளான், செப்டம்பர்.14-
இவ்வாண்டு கொண்டாடப்படும் மலேசிய தினத்தை முன்னிட்டு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி கூடுதல் விடுமுறை எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த நிலையில், அந்த நாளானது வேலை நாளா அல்லது விடுமுறை நாளா எனத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் குழப்பம் இன்னமும் நீடித்து வருகிறது. பிரதமரின் அறிவிப்பு அவ்வாறு இருக்க, தோட்ட நிர்வாகங்கள் அதற்கு மாறாக அன்றைய நாளில் தோட்ட த்தொழிலாளர்கள் வேலைக்கு வர வேன்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுவது அதிருப்தியை அளித்திருப்பதாக தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் கருத்துரைத்துள்ளார்.

அரசாங்கத்தின் இது போன்ற அறிவிப்புகள் தெளிவாக மக்களுக்குக் கொண்டுப் போய் சேர்க்கப்பட வேண்டும். மேலும், அந்த விடுமுறை நாளில் வேலை செய்தால், ஊதியக் கணக்கீட்டையும் அறிவித்தால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். காரணம், தற்சமயம் தெளிவு குன்றிய இந்த அறிவிப்பால், தீபாவளி, அல்லது தைப்பூசம் போன்ற விழாக் காலங்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் கூறி வருவதாக டத்தோ ஜி. சங்கரன் சுட்டிக் காட்டினார்.

கிள்ளான், புக்கிட் திங்கி தங்கும் விடுதியில் நடந்த தொழிற்சங்கங்களுக்கானப் பயிற்சியின் போது டத்தோ ஜி. சங்கரன் இவ்வாறு கூறினார்.








