நாசி கண்டார், நாசி லெமாக் உணவுடன் பன்றிக்கறியை விளம்பரப்படுத்துவதுபோல் சமூக வலைத்தளங்களில் பரவும் சர்ச்சைக்குரிய காணொளியைத் தொடர்ந்து அத்தகைய விற்பனைக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய முறையிலான விற்பனை வியூகத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்து இருப்பது தங்களை பிரமிக்கவைத்துள்ளது என்று பெட்டாலிங் ஜெயா, பும்பாசின் நாசி கண்டார் வியாபாரி சுரேஷ் ஜி கூறுகிறார். பன்றிக்கறியின் மூலம் நாசி கண்டாருக்கு தனிமெருகூட்டியிருப்பது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நாசி கண்டார் விற்பனை முன்பைவிட காணொளி பரவலுக்கு பிறகு சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
நாசி கண்டார் உணவுடன் பன்றிக்கறியை விளம்பரப்படுத்தும் காணொளி குறித்து பிரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தினர் அண்மையில் கண்டனம் தெரிவித்து இருந்தனர். நாசி கண்டாரில் இத்தகைய கலப்படமானது, நாசி கண்டார் உணவுத்துறையினருக்குக் பெரும் களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சங்கத் தலைவர் டத்தோ ஜவஹர் அகி தைப் கான் தமது அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.
எனினும் இந்த காணொளியினால் நாசி கண்டார் விபாபாரிகள் அதிக பலன் அடைவதாக சுரேஷ் தெரிவித்தார். குறிப்பாக மதியம் ஒரு மணிக்குள் நாசி கண்டார் விற்றுத் தீர்ந்து விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








