மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் திறன் மேம்பாட்டு நிதி நிறுவனமான பிதிபிகே இன்று சுங்கை பூலோவில் சிறப்பு 'PTPK Care' நிகழ்வை நடத்தியது.
இந்நிகழ்வில், உயர்கல்வியைத் தொடங்கும் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 308 மாணவர்களுக்கு மொத்தம் 113,500 ரிங்கிட் மதிப்பிலான ஆரம்பக்கட்ட கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. இவ்வுதவித் தொகையை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சார்பில் அவரின் அரசியல் செயலாளர் அயிசுடீன் அப்துல் கபார் மாணவர்களிடம் நேரடியாக வழங்கினார்.
அறக்கட்டளை, மெட்ரிகுலேஷன், எஸ்.டி.பி.எம். டிப்ளமோ, மற்றும் திவேட் எனப்படும் தொழில்நுட்பத் திறன் கல்வி பயிலும் மாணவர்களின் ஆரம்பக்கட்ட செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி உதவிப் பெற்ற மாணவர்களில் புக்கிட் காடிங் இடைநிலைப்பள்ளியின் ஆறாம் படிவ மாணவி தேஜாஸ்வி புஸ்பலதாவும் ஒருவர் ஆவார். இந்த நிதி தனது மேற்கல்விக்கு பெரிய உதவியாக இருக்கும் அதேவேளையில் தமக்கு இத்தகைய உதவியை நல்கிய டத்தோஸ்ரீ ரமணனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.
புக்கிட் காடிங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவி லோகலட்சுமி முருகன் கூறுகையில் இந்த உதவியின் மூலம் தமது பெற்றோரின் நிதி சுமையை குறைக்க முடியும் என்றார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பிதிபிகே தகவல் மையம், உரிமை கோரப்படாத பணத்திற்கான டபிள்யூ.தி.டி. முகப்பிடம் , மலிவு விலை ரஹ்மா விற்பனை, இலவச மருத்துவப் பரிசோதனை, இரத்த தான முகாம், இலவச முடி திருத்தம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்ஜின் ஆயில் மாற்றுதல் போன்ற பல்வேறு மக்கள் நலச் சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
மனிதவள அமைச்சு மற்றும் பி.தி.பி.கே. ஆகியவற்றின் இந்த நேரடித் தலையீடு, நாட்டின் கல்வி மற்றும் திவேட் துறையை வலுப்படுத்துவதோடு, அரசாங்கத்தின் சேவைகளை மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்த்துள்ளது.









