நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போயுள்ள 55 மலேசியர்களைத் தேடும் மீட்புப் பணியில் கைகொடுக்க, 11 பேர் கொண்ட மலேசிய சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவான SMART இன்று காலை நேபாளத்திற்குப் புறப்பட்டது.
தளபதி அப்துல் மனாஃப் சே ஈசா தலைமையிலான இந்தக் குழு, தேடுதல் மற்றும் மீட்பு, டிரோன் இயக்கம், தகவல் தொடர்பு, தளவாடம் மற்றும் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல்துறை திறன்களைக் கொண்டதாகும்.
தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பான NADMA-வின் கீழ் செயல்படும் SMART குழுவினர், சுபாங் விமானப்படைத் தளத்திலிருந்து மலேசிய விமானப்படையின் A400M விமானத்தில், 12.4 டன் மீட்பு உபகரணங்களுடன் புறப்பட்டனர்.
சுரங்கப் பகுதிகளிலும் மீட்புப் பணியில் ஈடுபடத் தேவையான சிறப்பு உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. எங்கு உதவி தேவைப்பட்டாலும் மீட்புப் பணியில் ஈடுபடுவோம்; ஆனால் கடைசியாக மலேசியர்கள் காணப்பட்ட பகுதிகளுக்கே எங்கள் முக்கிய கவனம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளப் பேரிடரில் சிக்கிய 55 மலேசியர்களின் நிலை இன்னும் தெரியாத நிலையில், அவர்களை உயிருடன் மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் SMART வீரர்கள் மனிதாபிமானப் பணிக்காக விரைந்துள்ளனர்.








