ஜோகூர், பண்டாபர் பாரு பெர்மாஸ் ஜெயா பகுதியில் அமலாக்க அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்ப முயன்றதாகக் கூறப்படும் 36 வயது வெளிநாட்டு மசாஜ் நிலையப் பெண், கடைத் தொகுதியின் 4-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்பிரண்டெண்ட் ங் ஸ்வீ சியாட் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக மாலை 3.48 மணிக்கு போலீஸ் துறைக்கு தகவல் கிடைத்தது.
ஜோகூர் பாரு மாநகர் மன்ற அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அந்தப் பெண் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அப்போது 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தலையில் மண்டை ஓடு முறிவு மற்றும் விலா எலும்புகள் உடைந்ததே மரணத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை போலீஸ் துறை, திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








