கோலாலம்பூர், டிசம்பர்.15-
கடந்த மாதம் மலாக்கா துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம், சிறப்பு விசாரணைக் குழு மூலம் தனது கட்டுப்பாட்டிக்குள் எடுத்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்து வரும் மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் விடுப்பில் சொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று இன்று வலியுறுத்தப்பட்டது.
அந்த மூன்று இந்திய இளைஞர்களும் போலீஸ்காரர்களைப் பாராங்கினால் தாக்க வந்தார்கள் என்று கூறி, கத்திகளைச் செய்தியாளர்கள் கூட்டத்தில் காட்டி, நம்ப வைக்க முயற்சி செய்துள்ள மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார், கொலைக் குற்றத்தில் முதலாவது சந்தேகப் பேர்வழியாவார்.
இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அந்த போலீஸ்காரர் விடுப்பில் அனுப்பப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மூன்று இந்திய் குடும்பங்கள் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன், இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தையும், உள்துறை அமைச்சையும் கேட்டுக் கொண்டார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த போதிலும் மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார், இந்த வழக்கில் தலையிட்டு, தொடர்ந்து கருத்துரைத்து வருவது, போலீஸ் துறையின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புவதாக உள்ளது என்று வழக்கறிஞர் ராஜேஸ் தெரிவித்தார்.
மூவர் சுட்டுப்பட்ட விவகாரத்தை புக்கிட் அமான் விசாரணை நடத்துகிறதா? அல்லது இன்னமும் மலாக்கா மாநில போலீஸ் துறை விசாரணை செய்கிறதா என்பதை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த சம்பத்தில் தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் விசாரணையில், மலாக்கா போலீஸ் தலைவர் தொடர்ந்து தலையிட்டு வருவது, வழக்கின் தன்மை குறித்து பாரபட்சப் போக்கு நிலவுவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
ஸுல்கைரி முக்தார் விடுப்பில் செல்ல வேண்டும் அல்லது வேறு மாநிலத்திற்கு வேலை மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சைத் தாங்கள் கேட்டுக் கொள்வதாக ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமியுடன் இணைந்து இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் வழக்கறிஞர் ராஜேஸ் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.








