ஷா ஆலாம், மே.24-
இனவாத அரசியல் மக்களைப் பிரித்தாள்வதோடு, நாட்டின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக அமையும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் எச்சரித்துள்ளார்.
கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் ஏற்பாடு செய்திருந்த நடப்பு விவகாரங்கள் குறித்த உரையில் பேசிய பிரகாஷ் , சிலாங்கூர் மாநில அரசாங்கம் இனம், மதம் அல்லது பின்னணி பாராமல் அனைத்து மக்களுக்கும் உதவிகளையும் மேம்பாடுகளையும் வழங்கி வருவதை உறுதிப்படுத்தினார்.
"நாம் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு உதவும் போது மற்றொரு தரப்பினர் கோபப்படுகிறார்கள். நாம் அனைவரும் மலேசியர்கள், தோல் நிறத்தைப் பார்க்காமல் அரசு அனைவருக்கும் உதவ வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான சிலாங்கூர் அரசாங்கத்தின் சாதனைகளைப் பாராட்டிய பிரகாஷ் , கோத்தா கெமுனிங் பகுதியில் வெள்ளப் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் மற்றும் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
குறிப்பாக, ஸ்ரீ மூடா வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக 100 மில்லியன் ரிங்கிட்டும் , சுங்கை கிள்ளான் திட்டத்திற்காக 600 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்திலான போக்குவரத்து விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரகாஷ் சம்புநாதன் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.








