கோலாலம்பூர், டிசம்பர்.09-
ஒரு சம்பவம் குறித்து புகார் அளிக்க வருகின்றவர் அணிந்திருக்கும் ஆடையைக் காரணம் காட்டி, புகார் அளிப்பதற்கான அவரின் அடிப்படை உரிமையைப் போலீஸ் துறை மறுக்கக்கூடாது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று நினைவுறுத்தியுள்ளார்.
விபத்து அல்லது குற்றச்செயல் தொடர்பாக புகார் அளிக்க வரும் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், அவர் அணிந்திருக்கும் ஆடையைக் காரணம் காட்டி, புகாரை ஏற்க போலீஸ் துறை மறுக்கக்கூடாது.
மாறாக, ஒருவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது என்பதை உறுதிச் செய்ய நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு ஒரு தெளிவான உத்தரவை போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் பிறப்பிக்க வேண்டும் என்று ஒரு சட்ட வல்லுநரான கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.
சாலை விபத்து தொடர்பாக புகார் அளிப்பதற்கு மலாக்கா ஜாசின் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு வந்த பெண்மணி ஒருவர், குட்டைப் பாவடை அணிந்திருக்கிறார் என்பதற்காக அவரின் புகாரை ஏற்க மறுத்து விட்ட போலீசாரின் நடவடிக்கை குறித்து எதிர்விணையாற்றுகையில் கோபிந்த் சிங் இதனைத் தெரிவித்தார்.
குற்றத்தன்மையைப் பார்த்து மக்கள் உடை அணிவதில்லை. அதே வேளையில் ஒருவர் சட்ட நடைமுறைக்கு ஏற்ப புகார் அளிக்கலாமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிப்பதற்கான அடிப்படையாக அவர் அணிந்திருக்கும் ஆடையை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் ஒரு வழக்கறிஞரான கோபிந்த் சிங் விளக்கினார்.
புகார் அளிக்க வருகின்றவர்களின் புகார் தன்மையின் அம்சங்களை மட்டுமே போலீஸ் துறை ஆராய வேண்டுமே தவிர அவர் அணிந்திருக்கும் ஆடை மீது ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. காரணம், புகார் என்பது எவ்விதத் தாமதமின்றி துரிதமாகக் கையாள வேண்டிய ஒரு விஷயம் என்பதைப் போலீஸ் துறை கருத்தில் கொள்ள வேண்டும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கோபிந்த் சிங் அறிவுறுத்தியுள்ளார்.








