கூலிம், ஆகஸ்ட்.26-
கெடா, கூலிம் தாமான் துங்கு புத்ரா குடியிருப்புப் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆடவர் ஒருவரின் அழுகிய சடலத்தைப் போலீசார் மீட்டுள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு, தூக்கில் தொங்கி, உயிரை மாய்ந்துக் கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தங்களின் குடும்பச் சொத்தான அந்த வீட்டை விற்பனைச் செய்வதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களுக்கும், வீட்டை வாங்கிய நபருக்கும் இடையில் வழக்கறிஞர் மூலம் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக மரணம் அடைந்த நபரின் சகோதரர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் சுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.
வீடு ஒப்பந்தம் நடைபெற்று முடிந்து ஒரு நல்ல நாளில் அந்த வீட்டில் புதுமனை புகுவிழா காத்திருந்த நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை அகற்றுமாறு வீடு வாங்கியவர், வீட்டை விற்ற நபரிடம் கேட்டுக் கொண்டதுடன் வீட்டின் சாவியை ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அந்த வீட்டில் தங்கியிருந்த தனது அண்ணனை கடந்த இரண்டு மாதக் காலமாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தனது சகோதரனைப் பார்ப்பதற்கு அந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். வீடு பூட்டியிருந்தது. அண்டை வீட்டுக்காரர்களும் அந்த வீட்டில் கடந்த இரண்டு மாதக் காலமாகத் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் உதவியுடன் நேற்று முன் தினம் நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து, உள்ள சென்று பார்த்த போது, மேல் மாடியில் ஆடவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் தரையில் விழுந்தபடி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று சுப்ரிண்டெண்டன் சுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.
சவப் பரிசோதனைக்காக சடலம், அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
நல்ல நாள் பார்த்து புதுமனை புகுவிழாவிற்கு காத்திருந்த வீட்டை வாங்கியவர், இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.








