தனியார் நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளில் பணிபுரியும் முற்போக்கு மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்வுப் பற்றிய ஆய்வை மனிதவள அமைச்சு மேற்கொண்டு வருவதாக அதன் அமைச்சர் சிவகுமார் வரதராஜூ தெரிவித்தார் .
மலேசிய தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 1,500 வெள்ளியை தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் கட்டாயமாக வழங்க வேண்டும் . அதே நேரத்தில் திறமை, அனுபவமிக்க தொழிலாளர்களுக்கும் அந்த அடிப்படை சம்பளம் வழங்குவது நியாயமான ஒன்றாக இல்லை.
எனவே தொழிலாளர்களின் முற்போக்கு மற்றும் உற்பத்தித் திறன் அடிப்படையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பற்றிய கலந்துரையாடல் மனிதவள அமைச்சியில் பேசப்பட்டு விட்டத்தாகவும், அடுத்தக் கட்டமாக இதன் பற்றிய முழுமையான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அமச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
முற்போக்கு மற்றும் உற்பத்தித்திறன் தொழிலாளர்களின் சம்பள உயர்வினால் முதலாளிகளுக்கு அதிக சுமையாகிவிடும் என்று பயப்பட தேவையில்லை.. ஏனென்றால், திறமை, அனுபவம் மற்றும் கல்வி அடிப்படையிலான தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு கட்டாயம் ஆக்கப்பட்டாது. அது, ஒவ்வொரு தொழிற்சாலையின் முதலாளியும் எடுக்கும் முடிவாகும் . ஆனால் அடிப்படை சம்பளம் கட்டாயம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார் அமைச்சர் சிவகுமார்.
பினாங்கு பிறையில் அமைந்துள்ள ஷண் பூர்ணம் தொழிற்சாலையில் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு நடைபெற்ற வர்தகர்களுடனான சிறப்புச் சந்திப்பில் அமைச்சர் சிவகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், டத்தோ செல்வகுமார் சண்முகத்தை தலைமை இயக்குநரான கொண்ட ஷண் பூர்ணம் நிறுவனத்தின் உலோகப் பொருள் மற்றும் மறு சுழற்சி தொழில்துறையில் சிறப்பான செயல்பாட்டை அமைச்சர் சிவகுமார் வெகுவாக பாராட்டினார்.
அதேவேளையில் இத்தொழில் துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையை டத்தோ செல்வகுமார் சண்முகம் தம்முடைய நேரடி கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும், அப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் சிவகுமார் உறுதி அளித்தார்.








