கெப்பாளா பாத்தாஸ், ஆகஸ்ட்.14-
பினாங்கு, கெப்பாளா பாத்தாஸில் கடைக்காரர் ஒருவர், தேசியக் கொடியைத் தலைகீழாகக் கட்டினார் என்பதற்காக அந்த கடையின் முன் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக மிரட்டி வந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே திட்டமிட்டப்படி சுமார் 200 பேருடன் அந்தக் கடையின் முன் இன்று திரண்டார்.
பொதுமக்கள் அந்தக் கடையின் முன் திரள வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்திய போதிலும் அந்த உத்தரவை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
அந்தக் கடையில் தடுப்புக்கள் அமைக்கப்பட்ட நிலையில் சுமார் 200 பேருடன் 1.4 கிலோமீட்டர் தூரம் வரை ஊர்வலமாக வந்த அக்மால், அமைதி பேச்சு வார்த்தை நடத்த வந்ததாகத் தெரிவித்தார்.
ஜாலூர் கெமிலாங் கொடிகளை ஏந்திய வண்ணம், மெர்டேக்கா…. மலேசியாவை நேசிக்கிறோம்… ஜாலூர் கெமிலாங்கை தற்காப்போம் என்ற முழக்கத்துடன் தேசியக் கொடியை அசைத்தவாறு அந்தக் கடையின் முன் அக்மால் வந்தடைந்தார்.
தாங்கள் யாரையும் இங்கு மிரட்ட வரவில்லை என்றும், தேசியக் கொடி மாண்புக்கு உரியது என்பதால் இனி இது போன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று நினைவுறுத்தவே தாங்கள் இங்கு வந்ததாகவும் அக்மால் கூறினார்.
இது அரசியல் அல்லது இனம் சார்ந்த கேள்வி அல்ல. மலேசியா மீதான தேசப்பற்று தொடர்புடைய விவகாரமாகும் என்று அக்மால் தெரிவித்தார். இந்த ஊர்வலத்தில் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த உறுப்பின்ரகளும் இணைந்திருந்தனர்.
எனினும் எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்வதற்கு போலீசார் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அந்தக் கடை வளாகத்திற்குச் செல்ல தடை விதிக்கும் தடுப்புகளையும் போலீசார் அமைத்திருந்தனர்.








