மலேசிய குற்றத்தடுப்பு நடவடிக்கைகளின் கண்காணிப்பு அமைப்பான மை வாட்ச் முன்னாள் தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவன், குற்றவியல் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டது செல்லாது என்றும் அவருக்கு 60 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு ஸ்ரீ சஞ்சீவனுக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் உயர் நீதிமன்றம் தவறு இழைத்து இருப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிபதி அசிசா ஓமார் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தவறு இழைத்து இருக்கின்ற காரணத்தினால் அந்த தீர்ப்பை திருத்துவதற்கு அப்பீல் நீதிமன்றம் தலையிட வேண்டியுள்ளது என்று தமது சுருக்கமான தீர்ப்பில் நீதிபதி அசிசா ஓமார் குறிப்பிட்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் குற்றவியல் தடுப்பு சட்டமான POCA ( போக்கா ) வின் கீழ் 21 நாட்கள் சிறையில் தாம் தடுத்து வைக்கப்பட்டது செல்லாது என்று கோரி மலேசிய அரசாங்கம் மற்றும் போலீஸ் துறைக்கு எதிராக ஸ்ரீ சஞ்சீவன் தொடுத்து இருந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தது.
எனினும் அந்த தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது.








