சிப்பாங், ஜூலை.30-
சிலாங்கூர், காஜாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவ மாணவன் ஒருவன், நேற்று ஆசிரியரை முகத்திலேயே குத்தி, தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கல்வி அமைச்சு, போலீசாரிடமே விட்டு விடுவதாக அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சைப் பொறுத்தவரை, நடப்பில் உள்ள விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்விவகாரத்தைக் கையாளும். அதே வேளையில், இந்தச் சம்பவத்தைப் போலீஸ் துறை கையாளுமானால், மேல் விசாரணைக்கு ஏதுவாக இந்த விவகாரம் முழுமையாகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
உடற்பயிற்சி பாடத்திற்கு மட்டம் போட்டதாகக் கூறப்படும் 14 வயது மாணவனை, ஆசிரியர் கண்டித்ததில் அதிருப்தி கொண்ட அந்த மாணவன், ஆசிரியரை முகத்திலேயே குத்தித் தாக்குதல் நடத்திய சம்பவம் காஜாங் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவம் தொர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அந்த மாணவனைக் கைது செய்த போலீசார் விசாரணைக்கு ஏதுவாக இரண்டு நாள் தடுப்புக் காவல் அனுமதியை நீதிமன்றத்தில் பெற்றுள்ளனர்.
பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்கள் முன்னிலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தங்கள் கைப்பேசியில் பதிவுச் செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் வினவிய போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் எனும் நல்லுரை வழங்கப்படும் என்று பதில் அளித்தார்.








