ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.20-
ஜார்ஜ்டவுன், ஜாலான் ஹெமில்டன் – ஜாலான் வான் பிராக் சாலையில் சமிக்ஞை விளக்குப் பகுதியில் மிக அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தியதாக நம்பப்படும் மாஸ்டா கார் ஓட்டுநர் ஒருவர், மோட்டார் சைக்கிளோட்டியை மோதித் தள்ளிய சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.25 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அப்துல் ரோஸாக் முகமட் தெரிவித்தார்.
22 வயது ஓட்டுநர் செலுத்திய மாஸ்டா ரகக் கார், மிக அபாயகரமாக மற்றொரு காரை முந்திச் செல்ல முயற்சித்த வேளையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதித் தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








