உலு சிலாங்கூர், ஆகஸ்ட்.01-
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் துணியால் மூட்டையாகக் கட்டப்பட்ட ஓர் ஆடவரின் சடலத்தைப் போலீசார் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் மீட்டுள்ளனர்.
உலு சிலாங்கூர், கலும்பாங், சுங்கை செரியான் பகுதியில் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயில் இருப்புப் பாதை அருகில் நேற்று காலை 10.30 மணியளவில் அந்த ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
புழுக்கள் மொய்த்த நிலையில் அழுகிய நிலையில் காணப்பட்ட அந்தச் சடலத்தில், எந்தவோர் அடையாளப் பத்திரமும் காணப்பபடவில்லை என்று உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.
துணியால் கட்டப்பட்ட அந்தச் சடலத்தின் மூட்டையில் நாலாபுறமும் பசை நாடா ஒட்டப்பட்டு இருந்தது. ரயில் மோதித் தள்ளுவதற்காக அந்தச் சடலம் இருப்புப் பாதைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சவப் பரிசோதனைக்காகச் சடலம் , சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள வேளையில், இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.








