சுங்கை பூலோ, ஏப்ரல்.19-
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், நாட்டில் பயோடீசல் உற்பத்தியைப் பெருமளவில் விரிவுபடுத்த தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். FELDA, FELCRA போன்ற அமைப்புகளுடன் இணைந்து செம்பனைக் கழிவுப் பொருட்களைக் கொண்டு குறைந்த செலவில் எரிபொருளைத் தயாரிப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களின் மீதான தேவையைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள 19 உயிரி எரிபொருள் ஆலைகளை ஒருங்கிணைத்துச் செயல்படுவதன் மூலம் மாதத்திற்கு 1.5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான உற்பத்தியை எட்ட முடியும் என்றும், இதற்கான முன்னோடிச் சோதனைகளை பெட்ரோனாஸ் நிறுவனம் வெற்றிகரமாகச் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த முன்னெடுப்பானது நீண்ட கால அடிப்படையில் உள்நாட்டில் டீசல் விலையை நிலைப்படுத்தவும் குறைக்கவும் உதவுவதுடன், நாட்டின் எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.








