செர்டாங், ஆகஸ்ட்.30-
ஓர் இனத்தின் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது என்ற போதிலும் மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடப்படுவதற்கும் அல்லது அவமதிப்பதற்கும் இனப் பெருமையைப் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
மற்றவர்களை அவமதிப்பதற்குத் தாங்கள் சார்ந்த இனப் பெருமையை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் கலாச்சாரத்தை மலேசியர்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
மலேசியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல்வேறு தனித்துவமான சிறப்புகளைக் கொண்ட மலேசியா, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது 68 ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது.
இந்நிலையில் இனப் பெருமை என்பது மறுக்க முடியாத அம்சம் என்றாலும் மற்றவர்களை அவமதிப்பதற்கு அந்த மகத்துவத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
தாம் ஒரு மலாய்க்காரராக இருப்பதிலும், மலாய் மொழியில் பேசுவதிலும் மலாய் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதிலும் பெருமை கொள்வதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
ஆனால், இத்தகையப் பெருமைகள், மற்ற இனங்களைச் சிறுமைப்படுத்துவதாகவோ, அழிப்பதாகவோ, அவமதிப்பதாகவோ இருக்கக்கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது நியாயமற்றச் செயலாகும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இன்று சனிக்கிழமை. செர்டாங் விவசாயக் கண்காட்சி பூங்காவில் நாளை கொண்டாடப்படவிருக்கும் 68 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையின் போது பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
பழம் பெருமைகள் என்பது ஓர் இனத்திற்கே உரியது அல்ல. இந்தியர்கள் மற்றும் சபா, சரவாவில் வசிக்கும் பூர்வக்குடி மக்களிடமும் இது போன்ற தனித்துவமான பெருமைகள் உண்டு என்று டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக் காட்டினார்.
மலேசிய மக்களின் ஒற்றுமை குறித்து பேசிய டத்தோ ஶ்ரீ அன்வார், சுதந்திரத்திற்கு முன்பு இது போன்ற தேசியவாத உணர்வு இருந்ததில்லை என்றார். சுருங்கச் சொன்னால், வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் மலாய்க்காரர்களிடம் கூட இந்த உணர்வு இருந்ததில்லை.
இருப்பினும் தேசிய உணர்வுதான் நாம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபானியர்கள், கடசான், முருட், பிடாயு ஆகியோரை வேறுபாடுயின்றி ஒற்றுமை என்ற ஒரு குடையின் கீழ் இணைக்கிறது. இந்த ஒற்றுமையும், ஒருமைப்பாடும் தொடர்ந்து தலைத்தோங்க வேண்டும் என்று பிரதமர் தமது உரையில் வலியுறுத்தினார்.








