கோலாலம்பூர், ஜூலை.31-
பொருளியல் அடிப்படையில், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் முன்னணி ஆசிய நாடுகளில் ஒன்றாகவும், உலகின் முதல் 30 நாடுகளுக்குள் ஒன்றாகவும், உருவெடுக்க மலேசியா இலக்கு கொண்டுள்ளது.
கிழக்கத்திய பண்பாட்டிலும் அறிவிலும் வேர் விட்டுள்ள தனது சொந்த அடையாளத்தைக் கொண்டு அவ்விலக்கை எட்டவும் அது முயலும். அதற்கு, மதிப்புருவாக்கம் சார்ந்த பொருளியலுக்கு மாறுவதையும் தொழில்முனைப்பை ஊக்குவிப்பதையும் முடுக்கிவிட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
வெறும் பயனீட்டாளராக அல்லாமல், தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடாக நாம் விளங்க வேண்டும். மலேசியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த பொருள்களைத் தயாரிக்கவும் சேவைகளை வழங்கவும் வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமனறத்தில் 13வது மலேசியத் திட்டம் அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தவிர உள்ளூர்த் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் மின்னிலக்க உருமாற்றத்திலும் கவனம் செலுத்தி, நாட்டின் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் தமது உரையில் வலியுறுத்தினார்.








