கோலாலம்பூர், ஜூலை.13-
சுகாதார அமைச்சு அக்டோபரில் வெளியிடவிருக்கும் பொது மருத்துவமனைகளிலும் அரசாங்கக் கிளினிக்குகளிலும் பகடி வதை மேலாண்மை வழிகாட்டுதல்களுக்கு மருத்துவப் பணியாளர்கள் சாதகமான வரவேற்பை அளித்துள்ளனர். இருப்பினும், இறுதிச் செய்வதற்கு முன் வழிகாட்டுதல்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மலேசிய மருத்துவச் சங்கம் சுகாதார அமைச்சை வலியுறுத்தியுள்ளது.
இது மருத்துவத் துறையில் பகடி வதை தொடர்பான புகார்களைக் கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில் பயனுள்ள கருத்துக்களை வழங்க உதவும் என்று அச்சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கல்வின்டர் சிங் கைரா தெரிவித்தார். இந்த வழிகாட்டுதல்கள் மனநல ஆரோக்கிய மேம்பாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் சுகாதார ஆர்வலர்களால் பாராட்டப்பட்டுள்ளன. மேலும் இது ராகிங்கைத் தடுக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் குறைந்த புகார் புள்ளி விவரங்கள் இன்னும் அச்சம் நிலவுவதைக் காட்டுகின்றன.








