ஷா ஆலாம், செப்டம்பர்.30-
அரசாங்கம் நேற்று அறிவித்த 24 மணி நேர சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களைச் சேர்க்குமாறு முன்னாள் கிள்ளான் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் திட்டத்தை சரியான திசையில் ஒரு படி மேல் என்று வர்ணித்த சார்ல்ஸ் சந்தியாகோ, இந்தத் திட்டத்தில் யாரும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பது மிக முக்கியமானது என்றும், எல்லைகள் தாண்டிய நிலையில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கும் இந்தச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.
"மலேசியாவைக் கட்டமைக்கும் அந்நிய தொழிலாளர்கள், வேலை இடங்களில் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கானச் சலுகைகள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் அவர்களின் குடும்பங்களைச் சென்றடைவதை நாம் உறுதிச் செய்ய வேண்டும்" என்று சார்ல்ஸ் சந்தியாகோ தமது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் வெற்றியானது, உரிமைக் கோரல்கள் மற்றும் அமலாக்கத்தின் அணுகலைப் பொறுத்ததாகும் என்றார்.
இதற்கு தெளிவான வழிமுறைகள் வேண்டும் என்பதுடன் வெறும் வாய்மொழியுடன் நின்று விடக்கூடாது என்று சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.
இந்தத் திட்டத்தை மலேசியா தொடக்கத்திலிருந்து முறையாகச் செய்ய வேண்டும். அதற்கான கொள்கையை வரைவதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் நலன் சார்ந்த தரப்பினரின் அணுக்கமான ஒத்துழைப்பு அவசியமாகும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.
தொழிலாளர்களுக்கு வேலை இடங்களில் ஏற்படக்கூடிய ஒரு காயம், ஒரு B40 குடும்பத்தையே பல வாரங்களுக்கு வறுமையில் தள்ளக்கூடும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று , ஊழியர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கும் திட்டத்தை மலேசியா விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது என்று அறிவித்திருந்தது தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் சார்ல்ஸ் சந்தியாகோ இதனைத் தெரிவித்தார்.
வேலையிடத்திற்கு வெளியிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகும் ஊழியர்களுக்குக் காயம் ஏற்பட்டால் புதிய திட்டம் கைகொடுக்கும் என்று பிரதமர் விளக்கியிருந்தார்.








