ஜோகூர் பாரு, நவம்பர்.05-
ஜோகூர், கோத்தா திங்கியில் உள்ள சுங்கை ஜோகூர் ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுபாடு, மாநில வரலாற்றில் மிக மோசமான தூய்மைக்கேடாகும் என்று மாநில பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் ஃபாஸ்லி முகமட் சால்லே தெரிவித்துள்ளார்.
இது மாநில நீர் வளத்தை அதிகளவில் பாதிக்கச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுங்கை ஜோகூர் ஆற்றில் ஏற்பட்டுள்ள நீர் மாசுப்பாட்டினால் லிங்கி, செமாங்கார், சுங்கை ஜோகூர் மற்றும் தாய் ஹோங் ஆகிய நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் சுமார் 1.2 மில்லியன் குடியிருப்பாளர்கள் நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தமாக கோத்தா திங்கி, ஜோகூர் பாரு, பொந்தியான், கெலாங் பாத்தா மற்றும் கூலாய் ஆகிய இடங்களில் 2 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.








