நெகிரி செம்பிலான், தம்பினை சேர்ந்த 25 வயது ஆர். தர்வீன் ராஜ்ஜை மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்து, சடலம் எரியூட்டப்பட்ட கோரக் கொலை தொடர்பில் அவரின் மூன்று நண்பர்கள் மலாக்கா, அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
25 வயதுடைய ஏ.ஏ டினேஸ், ஆர்.சி. வீரகணேஷ் மற்றும் வி. சசிகுமார் ஆகிய மூன்று நண்பர்கள், மாஜிஸ்திரேட் நூருல் பாஹியா கமாலுதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த மூன்று பேரும் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி மலாக்கா, பூலாவ் செபாங், கெமுனிங் கில் சாலையோரத்தில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில தர்வீன் ராஜ்ஜை வெட்டிக் கொலை செய்து சடலத்தை எரியூட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் மூவரும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
டினேஸ், வீரகணேஷ் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு எதிரான இந்த கொலை வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் மூவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த மூன்று நண்பர்களும் , தர்வீன் ராஜ் வசித்து வந்த Taman Bukit Ria வீடமைப்புப் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். தனது தம்பியுடன் படம் பார்க்க செல்வதாக கூறி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியே சென்ற தர்வீன் ராஜ் பின்னர் வீடு திரும்பவில்லை.
ஆறு நாட்களாக தேடப்பட்டு வந்த தர்வீன் ராஜ் உடல், கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கெமுனிங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
தர்வீன் ராஜ்ஜை கடத்தி சென்றதாக கூறப்படும் நபர்கள், அவரை நீண்ட பாராங்கினால் வெட்டிக் கொலை செய்து, சடலத்தை மறைப்பதற்கு எரியூட்டியதாக கூறப்படுகிறது.
அழுகிய நிலையில் மீட்கப்பட்ட தர்வீன் ராஜ் உடலில் 18 ஆழமான வெட்டுக்காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பில் 6 இந்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மூவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.








