கோத்தா கினபாலு, டிசம்பர்.19-
சபா மலேசிய பல்கலைக்கழமான யுஎம்எஸ்-இல் உள்ள சேன்சலர் அரங்கில், நேற்று 23 வயது மாணவரின் சடலம் கண்டறியப்பட்டது.
அவர் உயரத்திலிருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
நேற்று காலை 10 மணியளவில், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பராமரிப்புப் பணியாளர்களால், மேடையின் அருகே, அவரது சடலம் கண்டறியப்பட்டதாக கோத்தா கினபாலு போலீஸ் தலைவர் காசீம் மூடா தெரிவித்துள்ளார்.
அந்த அரங்கின் சிசிடிவி கேமரா பதிவில், அம்மாணவர் கடந்த புதன்கிழமை மாலை 6.09 மணியளவில் உயரத்திலிருந்து கீழே விழுந்து இறந்திருப்பதும் உறுதியாகியுள்ளதாக காசீ. மூடா குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், மாணவரின் சடலத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் காயங்கள் எதுவும் இல்லை என்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, மாணவரின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள யுஎம்எஸ், அவரது மரணம் தொடர்பான விசாரணைக்கு, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.








