பொருளாதாரத்திற்கான அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், கூட்டரசு அரசாங்க மட்டத்தில் பாரிசான் நேஷனல் மற்றும் அம்னோவுடன் பிகேஆர் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலாக்காவில் நேற்று நடைபெற்ற பிகேஆர் தேசிய மாநாட்டில் நிறைவுறையாற்றிய அன்வார், அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடியுடன் தமக்குள்ள தனிப்பட்ட உறவு தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இரு கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அரசியல் நிலைத்தன்மையையும் மக்களின் பொருளாதார வளத்தையும் கருத்தில் கொண்டு இந்த அணுகுமுறை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அன்வார், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உள்ள ஜசெக மற்றும் அமானாவுடனான உறுதியான ஒத்துழைப்பையும் பிகேஆர் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இஸ்லாம் மற்றும் அதன் கொள்கைகள் தொடர்பான விவகாரங்களில் பிகேஆர் எந்த சமரசத்தையும் செய்யாது என்றும், நாட்டில் வாழும் சீன மற்றும் இந்திய சமூகத்தினரும் நமது சக குடிமக்களே என்பதை வலியுறுத்தியுள்ளார்.








