Sep 15, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய சீர்திருத்த மசோதாக்களில் இனி தாமதம் வேண்டாம் / இவ்வாண்டிற்குள் நிறைவேற்ற அன்வாருக்கு ஜசெக காலக்கெடு
தற்போதைய செய்திகள்

முக்கிய சீர்திருத்த மசோதாக்களில் இனி தாமதம் வேண்டாம் / இவ்வாண்டிற்குள் நிறைவேற்ற அன்வாருக்கு ஜசெக காலக்கெடு

Share:

அட்டர்னி ஜெனரல் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிப்பது உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ளுமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை ஜசெக கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்புடைய மசோதாக்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஜசெக கோரியுள்ளது.

இது குறித்து ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சியில் தொடர்வதற்கான ஜசெகவின் முடிவு, முக்கிய நிறுவன மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற பொறுப்புடன் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் அட்டர்னி ஜெனரல், அரசு தரப்பு வழக்கறிஞர் பதவி பிரிப்பு மசோதா, பிரதமர் பதவிக்கு இரண்டு தவணை வரம்பு விதிக்கும் மசோதா ஆகியவை ஏற்கனவே தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைதியான ஒன்றுகூடல் சட்டம் மற்றும் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு குற்றங்கள் தொடர்பான சிறப்பு நடவடிக்கைகள் சட்டமான சோஸ்மா ஆகியவற்றிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜசெக வலியுறுத்தியுள்ளது.

சோஸ்மா திருத்தம் தொடர்பான அமைச்சரவை அறிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அமைதியான ஒன்றுகூடல் சட்டத் திருத்தங்கள் குறித்தும் பல மாதங்களாக விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் கோபிந்த் விவரித்துள்ளார்.

இதனிடையே தபுங் ஹாஜி தொடர்பான ஆர்சிஐ விசாரணை அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்துவதில் அரசாங்கம் காட்டிய அவசரத்தை, இதுபோன்ற முக்கிய சீர்திருத்தங்களிலும் காட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கூடுதல் அமர்வு நாட்களை ஒதுக்கி, தேவையான மசோதாக்களை ஆண்டு முடிவதற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோபிந்த் வலியுறுத்தியுள்ளார்.

Related News