கோலாலம்பூர், டிசம்பர்.13-
கடந்த பிப்ரவரி மாதம் பண்டார் சன்வே போலீஸ் நிலையத் தடுப்புக் காவலில் தனது கணவர் மணிசேகரன் மோகன் மரணம் அடைந்தது தொடர்பில் தங்களிடம் இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தப்படாதது குறித்து அவரின் மனைவி எஸ். ராஜேஸ்வரி ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்புக் காவல் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று புக்கிட் அமான் போலீஸ் புலனாய்வுப் பிரிவிற்கு சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்ட போதிலும் , தம்மிடமோ அல்லது தமது குடும்ப உறுப்பினரிடமோ போலீஸ் துறை இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தாதது குறித்து ராஜேஸ்வரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்டு ஏழு நாட்கள் கடந்தும் போலீஸ் தரப்பில் எந்தவொரு தகவலும் பெற முடியவில்லை என்று ராஜேஸ்வரி தனது ஏமாற்றத்தைப் பதிவுச் செய்துள்ளார்.
போலீசாரின் நடவடிக்கை ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்புக் காவலில் தனது கணவர் இறந்தது குறித்து மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சட்டத் துறை அலவலகம் உத்தரவிட்டு இருப்பதையும் ராஜேஸ்வரி சுட்டிக் காட்டினார்.
41 வயது மணிசேகரன், இவ்வாண்டு முற்பகுதியில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே போலீஸ் தடுப்புக் காவலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ராஜேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.








