கோலாலம்பூர், ஜனவரி.13-
2026 ஆம் ஆண்டு பள்ளி தொடக்க காலத்திற்கான மாணவர்களுக்கு வழங்கப்படும் தலா 150 ரிங்கிட் நிதியுதவியை எந்தவொரு கட்டணப் பிடிப்பும் இன்றி பெற்றோர்களிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் இன்று உத்தரவிட்டுள்ளார்.
பெற்றோர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நிதியுதவியில் 10 சென் அல்லது 1 ரிங்கிட் குறைந்தாலும் அது குறித்து உடனடியாக அமைச்சிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டணங்கள் அல்லது இதர பள்ளி கட்டணங்களை இந்த நிதியுதவியிலிருந்து கழிக்கக்கூடாது என்றும், அத்தகைய கட்டணங்களைச் சம்பந்தப்பட்டவர்கள் தனியாகவே கையாள வேண்டும் என்றும் ஃபாட்லீனா சீடேக் அறிவுறுத்தினார்.
இந்த 150 ரிங்கிட் நிதியுதவி முற்றிலும் மாணவர்களின் பள்ளிச் சீருடை, காலணிகள் மற்றும் இதர கல்வித் தேவைகளுக்காகவே வழங்கப்படுகிறது. எனவே, அதனை முழுமையாகப் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் வந்து இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வது, தங்கள் பிள்ளைகளின் கல்வித் தரம் மற்றும் நடத்தை குறித்து ஆசிரியர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நடப்பாண்டில் பள்ளி தொடங்கிய முதல் வாரத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது குறித்து சில பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்ததால், அடுத்த ஆண்டு முதல் இந்த நிதியுதவி பள்ளி தொடங்குவதற்கு முன்பே விநியோகிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.








