Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சட்டப் பாதுகாப்பு தேவையில்லை என்கிறார் துன் மகாதீர்
தற்போதைய செய்திகள்

சட்டப் பாதுகாப்பு தேவையில்லை என்கிறார் துன் மகாதீர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.23-

ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பூலாவ் பத்து பூத்தே தீவு விவகாரத்தில் தாம் குற்றம் இழைத்து இருப்பதாக அரசாங்கம் கருதுமானால் தம்மைத் தாராளமாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டலாம் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று சவால் விடுத்துள்ளார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் என்ற முறையில் தமக்குச் சட்டப் பாதுகாப்பு தேவையில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

சட்டப் பாதுகாப்பு என்பது, தாங்கள் குற்றம் இழைத்து இருப்பதை உணர்ந்து, நீதிமன்றத்திற்குச் செல்ல பயப்படுகின்றவர்களுக்கு மட்டுமே தேவைப்படுமே தவிர அது தமக்குத் தேவைப்படாது என்று துன் மகாதீர் கிண்டல் தொனியில் கூறினார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஓர் அரசு தரப்பு வழக்கறிஞரைப் போலவும், ஒரு நீதிபதியைப் போலவும் செயல்பட்டதாக துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.

பத்து பூத்தே தீவு விவகாரத்தில் தாம் ஒரு குற்றவாளி என்று அன்வார் தீர்ப்பளித்து இருப்பதாக துன் மகாதீர் கூறினார்.

எனினும் தாம் ஒரு குற்றவாளியாகக் கருதப்பட்டாலும் தமது வயது காரணமாக தம் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அன்வார் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News