கோத்தா கினபாலு, அக்டோபர்.10-
அரசாங்க நிகழ்ச்சிகளில் மதுபானத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு சபா முற்போக்கு கட்சியான எஸ்ஏபிபி கண்டனம் தெரிவித்துள்ளது.
தீபகற்ப மலேசிய அரசியல்வாதிகளின் இந்த கோரிக்கை, சபா மாநிலத்தின் கலாச்சார அடையாளத்திற்கு மிரட்டலையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தலாம் என்று அது எச்சரித்துள்ளது.
டுரீசம் மலேசியா எனும் அரசாங்க சுற்றுலா முகமையின் விருந்து நிகழ்ச்சியில் மதுபானம் பரிமாறப்பட்ட சம்பவம் அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சபாவைத் தளமாகக் கொண்ட அந்த முன்னணி கட்சி, இத்தகைய நினைவுறுத்தலை வழங்கியுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் மதுபானம் கூடாது என்று கோரிக்கை விடுப்பது சபாவின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடுவதற்கு ஒப்பாகும். இது, சபா மாநிலத்தின் சமயம் மற்றும் கலாச்சார சுதந்திரத்திற்கு உத்தரவாதமளிக்கக்கூடிய 20 அம்ச உடன்பாட்டுக்கு முரணாகவும் உள்ளது என்று அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ சோங் பிட் ஃபா குறிப்பிட்டார்.
1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தின் 18 மற்றும் 20 ஆவது அம்சங்கள், சபா மற்றும் சரவா மாநிலங்களின் சமயம் மற்றும் கலாச்சாரச் சுதந்திரத்திற்கு உத்தரவாதமளிக்கிறது. இது, எங்களின் மாநில தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று ஓர் அறிக்கையில் டத்தோ சோங் குறிப்பிட்டுள்ளார்.
சபாவைப் பொறுத்தவரை, கெஅமாத்தான் போன்ற விழாக்களிலும், இதர பல கலாச்சார விழாக்களிலும் மதுபானம் பரிமாறப்படுகிறது. கெஅமாத்தான் விழாவில் தாப்பாய் எனப்படும் பாரம்பரிய அரசி மதுபானம் பரிமாறப்படுகிறது. விருந்தினர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் மதுபானம் வழங்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்படுமானால் கெஅமாத்தான் திருவிழாவையும், இதர பாரம்பரிய நிகழ்ச்சிகளையும் தாங்கள் சிறப்பாக நடத்த முடியாது என்று தீபகற்ப மலேசிய அரசியல்வாதிகளுக்கு டத்தோ சோங் நினைவுறுத்தினார்.
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்படுமானால் கெஅமாத்தான் திருவிழாவையும், இதர பாரம்பரிய நிகழ்ச்சிகளையும் தாங்கள் சிறப்பாக நடத்த முடியாது என்று தீபகற்ப மலேசிய அரசியல்வாதிகளுக்கு டத்தோ சோங் நினைவுறுத்தினார்.








