லங்காவி, நவம்பர்.09-
மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததாகச் சந்தேகிக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, கோலா மூடா பகுதியில் மேலும் இரண்டு மியான்மார் நாட்டவர்கள் இன்று மாலை மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை மியான்மார், வங்கதேசத்தைச் சேர்ந்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு ரோஹிங்கியா பெண்மணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த 11 பேரும், முதலில் கவிழ்ந்ததாக நம்பப்படும் படகில் பயணித்த போது, வர்த்தகக் கப்பல்களாலும் உள்நாட்டு மீனவர்களின் உதவியுடனும் மீட்கப்பட்டனர். கடலில் இன்னும் பலர் இருக்கலாம் என்று கெடா, பெர்லிஸ் மாநிலக் கடலோரக் காவற்படை இயக்குநர் ரொம்லி முஸ்தஃபா நம்பிக்கை தெரிவித்ததோடு, மனிதக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.








