50 விழுக்காடு வரை லாபம் கிடைக்கும் எனக் கூறி நடத்தப்பட்ட முதலீட்டு மோசடியில், 67 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் 5 லட்சத்து 21 ஆயிரத்து 787 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முகநூலில் வெளியிடப்பட்ட முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்து, அதில் குறிப்பிடப்பட்ட நபரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைக் கேட்டுள்ளார்.
முதலீட்டுத் தொகைக்கு 50 விழுக்காடு வரை லாபம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை நம்பி, செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 16 முறை பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.
முதலீட்டுத் தொகை, கணக்குத் தொடங்குவதற்கான கட்டணம், கையொப்பச் சரிபார்ப்புக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை எனப் பல்வேறு காரணங்களைக் கூறி அவரிடம் பணம் பெறப்பட்டுள்ளது என்று ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அஸ்ருல் ஹிஷாம் முஹமட் ஷாஃபி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் தனது சேமிப்புப் பணத்திலிருந்து மொத்தம் 5 லட்சத்து 21 ஆயிரத்து 787 ரிங்கிட்டை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








